சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு அருகே மீனவர் வீட்டில், பீரோவை திறந்து போலீசார் சோதனை: தங்க கட்டிகள் இல்லை; 10 அரிவாள்கள் சிக்கின
மண்டைக்காடு அருகே மீனவர் வீட்டில், பீரோவை திறந்து போலீசார் சோதனை: தங்க கட்டிகள் இல்லை; 10 அரிவாள்கள் சிக்கின
07-10-2014
மண்டைக்காடு அருகே புதூர் மீனவர் கிராமத்தில் உள்ள மீனவர் ஒருவர் வீட்டில் தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை மண்டைக்காடு போலீஸ்நிலையத்துக்கு மர்ம போன் வந்தது. உடனே போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை போட்டனர். அப்போது அங்கு வெளிப்பகுதியில் தங்க கட்டிகள் எதுவும் சிக்கவில்லை. வீட்டில் பீரோ இருந்த அறை மட்டும் பூட்டப்பட்டு இருந்தது. போலீசார் அந்த அறையில் சோதனை நடத்த முடியவில்லை.
வீட்டில் முதியவர் ஒருவர் மட்டும் இருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது பீரோ சாவி தனது மருமகளிடம் இருப்பதாக கூறினார். மருமகள் அவரது தாய் வீட்டுக்கு சென்று உள்ளதாகவும் கூறினார். உடனே அந்த வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த முதியவரின் மருமகளை போலீசார் தேடிவந்தனர். அந்த பெண் வீட்டுக்கும் வரவில்லை. அவரை கண்டுபிடிக்கவும் முடியவில்லை.
பீரோவை திறந்து பார்த்தால்தான் தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய முடியும். இதற்காக போலீசார் தீவிர முயற்சி எடுத்து வந்தனர். இதற்கிடையே அந்த வீட்டில் இருந்த முதியவர் வீட்டை திறந்து போட்டுவிட்டு வெளியே சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. பீரோ உள்ள அறைமட்டும் பூட்டப்பட்டு இருந்தது. வீட்டின் மற்ற பகுதி எல்லாம் திறந்து கிடந்தது.
போலீசார் வீட்டு முன் காவலுக்கு இருந்த நேரத்தில் வீட்டின் பின் பகுதியில் இரவு யாரோ வீட்டின் 3 ஓட்டை பிரித்து வைத்து உள்ளனர். இதனால் யாரோ ஓட்டை பிரித்து தங்க கட்டியை எடுத்து சென்று விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மணவாளக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் நாகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் தாரணி ஆகியோர் அந்த வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.
நேற்று மாலையில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்க போஸ் மற்றும் போலீசார் சோதனை நடத்தியபோது பீரோ இருந்த வீட்டின் சாவி கதவு அருகே இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் மரபீரோஅருகில் இருந்த சாவியை எடுத்து பீரோவையும் திறந்து பார்த்தனர். அதில் தங்க கட்டிகள் எதுவும் இல்லை. ஒரு சாக்கு மூட்டையில் 10 வீச்சரிவாள்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றும் 2½ அடி நீளம் இருந்தன. மேலும் பீரோவில் ரூ.31 ஆயிரத்து 600 ரொக்கப்பணமும், தங்க நகைகளும் இருந்தன. அதனை போலீசார் கைப்பற்றி போலீஸ்நிலையம் கொண்டுவந்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக நிலவி வந்த பரபரப்பு அடங்கியது. அந்த வீட்டில் தங்க கட்டி பதுக்கி வைத்து இருந்ததாக கூறி போன்பேசி போலீசாரை திணறடித்த மர்ம ஆசாமி யார்? என்று மண்டைக்காடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments: