Headlines
Loading...
எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

எம்.ஆர். காந்தி தாக்கப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு
22-04-2013
குமரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எம்.ஆர். காந்தி. (வயது 68). மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். நாகர்கோவில், ராமவர்மபுரம் சிதம்பரநாதன் தெருவில் வசித்து வரும் எம்.ஆர். காந்தி தினமும் காலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம். நேற்றும் இதுபோல நேசமணி நகர், ஆசாரி பள்ளம் ரோட்டில் நடைபயிற்சிக்கு சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் அவரை வழி மறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.
கடைகள் அடைக்கப்பட்ட நாகர்கோவில் கோர்ட் ரோடு
இதில் படுகாயம் அடைந்த எம்.ஆர். காந்தி பால்பண்ணை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எம்.ஆர். காந்தி தாக்கப்பட்ட சம்பவம் பற்றி தெரியவந்ததும், குமரி மாவட்டம் முழுவதும் உள்ள பாரதீய ஜனதா கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். வெட்டியவர்களை உடனே கைது செய்யக் கோரி நாகர்கோவில், ஆத்திக்காட்டுவிளை, பிள்ளையார்புரம் பகுதிகளில் மறியல் போராட்டம் நடந்தது. பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், இச்சம்பவத்தை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று மாவட்டம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
மருத்துவமனையில் சிகிட்சை பெறும் எம்.ஆர்.காந்தி
இன்று காலையில் மாவட்டத்தின் முக்கிய நகரங்களான நாகர்கோவில்,  மணவாளக்குறிச்சி, தக்கலை, திங்கள்நகர், வெள்ளிசந்தை, குளச்சல், அம்மாண்டிவிளை, மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. டீக்கடைகள், பெட்டிக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சிறு கடைகள் கூட அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சிரமப்பட்டனர்.
கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி
எம்.ஆர். காந்தி தாக்கப்பட்ட தகவல் பரவியதுமே நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டன. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் கிராமப்புறங்களுக்கு செல்லும் இரவு நேர “ஸ்டே பஸ்”களை இயக்கவில்லை. இருந்தும் இரவில் வெளியூர்களிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்த பஸ்கள் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதனால் காலை 9 மணி வரை “டவுன் பஸ்”கள் எதுவும் இயக்கப்படவில்லை. போக்குவரத்து நடைபெறாததால் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். வெளிமாவட்டங்களிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்த பஸ்கள் பயணிகளை இறக்கி விட்ட பின்பு போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் புறப்பட்டுச்சென்றது.
அம்மாண்டிவிளை பகுதியில் கடைகள்
அடைக்கப்பட்டிருந்த காட்சி
திருவனந்தபுரம் செல்லும் பஸ்களும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் சென்றது. நகருக்குள் பெரும்பாலான ஆட்டோக்களும் ஓடவில்லை. இதனால் வெளியூர்களிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்தவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிக்கு ஆளானார்கள். பாரதீய ஜனதா கட்சியினரின் போராட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் 750-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்கள் உடைப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்ததை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலிருந்து கூடுதலாக 300 போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: