
மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சியில் காதலனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை
மணவாளக்குறிச்சியில்
காதலனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை
05-02-2013
மணவாளக்குறிச்சி புதுக்கடை தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 52), இவரது மகள் ஷோபா (25). குருந்தன்கோடு அருகே உள்ள வீரவிளையைச் சேர்ந்தவர் சதீஷ். ஷோபாவும், சதீசும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து 2 வீட்டாரும் பேச்சு நடத்தி ஷோபாவுக்கும், சதீசுக்கும் திருமணம் செய்ய சம்மதித்தனர். வருகிற 11-ந்தேதி இவர்களுக்கு திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. மேலும் திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. நேற்று மாலை அய்யப்பன் தனது மனைவியுடன் வெளியில் சென்றிருந்தார். வீட்டுக்கு திரும்பிய அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் ஷோபா தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனே அவரை தலக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஷோபா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி மணவாளக் குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், திருமணத்துக்கு துணி எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மனமுடைந்து ஷோபா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments: