சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே திருமணமான 9-வது மாதத்தில் கணவர் இறந்த சோகத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை
மணவாளக்குறிச்சி அருகே திருமணமான 9-வது மாதத்தில்
கணவர் இறந்த சோகத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை
ஆர்.டி.ஒ. விசாரணை
12-02-2013
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் ஜாண்பால் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய சுனில். இவரது மனைவி ஆரோக்கிய ஜெரிலில் (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி 9 மாதங்கள் ஆகிறது. 3 மாதங்களுக்கு முன்பு ஆரோக்கிய சுனில் உடல் நலம் இல்லாமல் இறந்து விட்டார். அப்போது ஆரோக்கிய ஜெரிலில் கர்ப்பாமாக இருந்தார். திருமணம் ஆன 6-வது மாதத்திலேயே கணவர் இறந்ததால் ஆரோக்கிய ஜெரிலில் சோகமாக இருந்து வந்தார்.
அதனால் அவரை அவரது அக்கா சகாய கில்டா தனது வீட்டில் தங்க வைத்து பராமரித்து வந்தார். இந்நிலையில் சகாய கில்டா நேற்று நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றார். வீட்டில் ஆரோக்கிய ஜெரிலில் மற்றும் அவரது பாட்டியும் இருந்தனர். பாட்டிக்கு கண் பார்வை சரியாக இல்லை. இந்நிலையில் கணவர் இறந்த சோகத்தில் இருந்த ஆரோக்கிய ஜெரிலில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாலை வீடு திரும்பிய அவரது அக்கா, தங்கை தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது தங்கையின் உடலை பார்த்து கதறி அழுதார். அதுவரை ஆரோக்கிய ஜெரிலில் இறந்தது தெரியாமல் வீட்டில் இருந்த கண்பார்வை சரியாக இல்லாத பாட்டியும் கதறி அழுதார். அந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
தற்கொலை செய்து கொண்ட ஆரோக்கிய ஜெரிலில் தற்போது 8 மாத கர்ப்பமாக இருந்தார். இந்த சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி முத்து வழக்குபதிவு செய்து ஆரோக்கிய ஜெரிலில் உடலை பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
திருமணம் ஆன 9-வது மாதத்தில் ஆரோக்கிய ஜெரிலில் தற்கொலை செய்து கொண்டது குறித்து பத்மநாபபுரம் ஆர்.டி.ஒ. மோகன சுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் கடியப்பட்டணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




0 Comments: