
சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபர் எரித்து கொலை
மணவாளக்குறிச்சி அருகே கள்ளக்காதல் தகராறில்
வாலிபர் எரித்து கொலை
15-01-2013
மணவாளக்குறிச்சி அருகே மூங்கில்விளை பள்ளிகரை பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி அந்த பகுதியினர் மணவளக்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்தனர். பிணமாக கிடந்தவரின் அருகே பெட்ரோல் கேனும் ஒரு கைப்பையும் கிடந்தது. அந்த கைப்பையில் இருந்த செல்போனை எடுத்து அதில் பதிவாகி இருந்த எண்களை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தனர்.
இதில் பிணமாக கிடந்தவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகரை சேர்ந்த ஸ்டீபன் கிளாடி இசக்கியான் (வயது 23) என்று தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஸ்டீபன் கிளாடி இசக்கியான் வேலூரில் இருந்து இங்கு எதற்காக வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஸ்டீபன் கிளாடி இசக்கியான் இரவு 10.45 மணிக்கு ஒருவருடன் நீண்ட நேரம் பேசி உள்ளார். அதன்பிறகுதான் அவர் இறந்துள்ளார். இதனால் அவர் செல்போனில் பேசிய நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். அந்த செல்போன் நம்பர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணின் செல்போன் எண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பெண்ணுக்கு தற்போது திருமணம் ஆகி 7 மாதம்தான் ஆகி இருந்தது. திருமணத்திற்கு முன்பு ஸ்டீபன் கிளாடி இசக்கியானுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. மேலும் அந்த பெண்ணின் திருமணத்திற்கும் ஸ்டீபன் கிளாடி இசக்கியான் வந்துள்ளார்.
திருமணம் முடிந்த பிறகு அந்த பெண் இவருடன் உள்ள தொடர்பை துண்டித்து கொண்டார். ஆனால் ஸ்டீபன் கிளாடி இசக்கியான் அந்த பெண்ணை விடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் ஊரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ஸ்டீபன் கிளாடி இசக்கியான் அந்த பெண்ணிடம் நீண்ட நேரம் பேசி உள்ளார். அதன் பிறகு அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதற்கு பிறகே ஸ்டீபன் கிளாடி இசக்கியான் இறந்துள்ளார்.
எனவே அவரை யாராவது அடித்து அதன்பின்பு எரித்து கொன்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அல்லது அவரை கள்ளக்காதலி வெறுத்து ஒதுக்கியதால் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர்கள் தொடர்ந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இனி ஸ்டீபன் கிளாடி இசக்கியானின் உறவினர்கள் வந்த பின்னரே இந்த விசயம் குறித்து கூடுதல் தகவல் கிடைக்கும். அதன்பிறகே ஸ்டீபன் கிளாடி இசக்கியான் எப்படி இறந்தார் என்று தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
0 Comments: