குமரிமாவட்ட செய்திகள்
சுனாமி தாக்குதலின் 8–ம் ஆண்டு நினைவுதினம்: நினைவிடங்களில் மலர்தூவி உறவினர்கள் அஞ்சலி
சுனாமி தாக்குதலின் 8–ம் ஆண்டு நினைவுதினம்:
குமரி மாவட்ட கடற்கரை கிராமங்கள் சோகத்தில் மூழ்கின
நினைவிடங்களில் மலர்தூவி உறவினர்கள் அஞ்சலி
27-12-2012
சுனாமி தாக்குதலின் 8–ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது. மேலும், நினைவிடங்களில் சிறப்பு திருப்பலியும் நடத்தப்பட்டது.
கடலில் இருந்து எழுந்து வந்த பேரலைகள் தமிழக கடற்கரை பகுதியை துவம்சம் செய்ததோடு, ஆயிரக்கணக்கான மனித உயிர்களையும் வாரிச்சுருட்டிச் சென்ற தினம்தான் 26.12.2004 ஆகும். அதுவரை நாம் கேட்டிருக்காத சுனாமி என்ற வார்த்தையை இயற்கை அறிமுகப்படுத்தியதும் அன்றைய தினம்தான். அன்று நடந்து முடிந்த சம்பவங்கள் அன்றோடு முடிந்து போய்விடவில்லை. தினம் தினம் நினைவுகூறப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
அப்படி இருக்கும்போது சுனாமி தாக்குதல் தினம் மட்டும் மறந்தா போய்விடும். இந்த சுனாமியில் இழந்தவைகளை மீட்டெடுக்க முடியாமல் நினைவுகளை மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறனர் பாதிக்கப்பட்டவர்கள். இந்தநிலையில் நேற்று சுனாமி வந்து சென்ற 8–வது ஆண்டு நினைவு தினம் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் அனுசரிக்கப்பட்டது. ஆண்டுகள் பல கடந்த போதிலும் தங்கள் உறவுகளை பறிகொடுத்தவர்கள் அவர்களது கல்லறையில் விழுந்து தேம்பித்தேம்பி அழுது புரண்டது கவலையின் உச்சத்தை தொட்டுவிட்டதை காணமுடிந்தது.
அதிலும் குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, மணக்குடி, குளச்சல், கொட்டில்பாடு, கோடிமுனை, சைமன்காலனி, இனயம், மண்டைக்காடு, குறும்பனை, வாணியக்குடி, மணவாளக்குறிச்சி, அழிக்கால், பிள்ளைத்தோப்பு, ராஜாக்கமங்கலம் ஆகிய பகுதிகளில் சுனாமிக்கு 800–க்கும் மேற்பட்டோர் சுனாமியில் சிக்கி பலியானார்கள். அவர்களது நினைவுதினம் கடற்கரை கிராமங்களில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கடற்கரை கிராமங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நினைவுத் திருப்பலியும், மவுன ஊர்வலமும், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மணக்குடி புனித அந்திரேயார் ஆலயத்தில் பங்குதந்தை ஆன்றனி அல்காந்தர் தலைமையில் நேற்று காலை 6.30 மணிக்கு சுனாமியில் இறந்தவர்கள் நினைவாக திருப்பலி நடந்தது. அதை தொடர்ந்து சுனாமியில் உயிரிழந்த 138 பேர் புதைக்கப்பட்ட கல்லறை தோட்டத்திற்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலமாக சென்றனர். அங்கு நினைவிடத்தில் அவர்கள் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றிவைத்தும் அஞ்சலி செலுத்தினர். அப்போது உறவினர்களை இழந்த பெண்கள் துக்கத்தை அடக்க முடியாமல் கதறித்துடித்து கண்ணீர் வடித்தனர்.
கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் 199 பேர் பலியானார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொட்டில்பாடு சுனாமி கே.எஸ்.எஸ்.எஸ்.காலனியில் இருந்து மெழுகுவர்த்தியை கையில் ஏந்தியபடி மவுன ஊர்வலமாக புறப்பட்டனர். ஒரே இடத்தில் 199 பேர் புதைக்கப்பட்ட நினைவிடத்திற்கு ஊர்வலம் வந்ததும் அங்கு மெழுகுவர்த்தியை ஏற்றியும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் புனித அலெக்ஸ் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் அனைவரும் பங்கேற்றனர். சுனாமியில் இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் பங்குதந்தைகள் மலர் வளையம் வைத்தும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இதில் கொட்டில்பாடு பங்குதந்தை பெலிக்ஸ் அலெக்சாண்டர், தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் பங்குதந்தை சர்ச்சில், பங்குதந்தைகள் சேவியர், இளங்கோ, ஜீலியஸ் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். திருப்பலியை பங்குதந்தை பெலிக்ஸ் அலெக்சாண்டர் நடத்தினார்.
சுனாமி நினைவுதினத்தையொட்டி குமரி மாவட்ட மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடற்கரை கிராமங்களில் பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் மிகவும் துயருடன் காணப்பட்டனர். இதனால் கடற்கரை கிராமங்கள் முழுவதும் சோகமயமாக காட்சியளித்தன.
0 Comments: