Surrounded Area
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா முன்னேற்பாடு குறிது ஆலோசனை கூட்டம்
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் திருவிழா வருகிற 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் 12-ம் தேதி நள்ளிரவு முக்கிய பூஜையான ஒடுக்கு பூஜை நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்த விழாவுக்கான முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று மண்டைக்காடுக்கு வந்தார். அவர், கடற்கரை, தேவசம் மேல்நிலைப்பள்ளி, பக்தர்கள் பொங்கலிடும் மண்டபம் போன்ற பகுதிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மாசி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பேசியதாவது:-
ஒவ்வொரு துறையை சேர்ந்தவர்களும், இங்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். வாகனங்கள் நிறுத்துவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும், பிளாஸ்டிக் கப் போன்றவற்றை தடை செய்ய வேண்டும், சாலையோரங்களில் மின் விளக்குகள் எரிவதை கண்காணித்தல், திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்குதல், குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க செய்வது, வீதிகளின் குறுக்கே விளம்பர பதாகைகள் வைப்பதை தடை செய்தல், பக்தர்களின் பாதுகாப்பு கருதி 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதி ஏற்படுத்துதல், கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான படகு மற்றும் நீச்சல் வீரர்களை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, பத்மநாபபுரம் உதவி-கலெக்டர் சரண்யா அரி, நாகர்கோவில் உதவி- கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், மாவட்ட சுகாதார பணி துணை இயக்குனர் மதுசூதனன், தீயணைப்புதுறை அலுவலர் சரவணபாபு, கல்குளம் தாசில்தார் ராஜாசிங், கோவில்களின் உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மண்டைக்காடு கோவில் மேலாளர் ஆறுமுகதரன், மண்டைக்காடு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: