Surrounded Area
மண்டைக்காடு புதூர் முதல் குளச்சல் வரை ஏ.வி.எம். கால்வாயை தூர்வார திட்டம்
குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி, மீனவர்கள் மற்றும் மீனவ சங்கப்பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, மீன்வளத்துறை துணை இயக்குனர் லேமக் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மீனவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசும்போது கூறியதாவது:-
மண்டைக்காடு - குளச்சல் சாலை ஓர ஏவிஎம் கால்வாய் |
குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கடலில் மீன்பிடிப்பதில் விசைப்படகு மீனவர்களுக்கும், நாட்டுப்படகு மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி சிறு, சிறு பிரச்சினைகள் ஏற்படும். அதை தடுக்கும் விதமாக குமரி மாவட்டத்துக்கு என நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரோந்து படகு விடவேண்டும். குளச்சல் மற்றும் நாகர்கோவில் மீன்வளத்துறை அலுவலகங்களில் உள்ள உதவி இயக்குனர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் ஏராளமான குப்பைகள் தேங்கி உள்ளன. இதனை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். குளச்சலிலும் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கூட்டம் |
முட்டத்தில் மழையால் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. குடிநீர் பிரச்சினையும் இருந்து வருகிறது. கடற்கரை கிராமங்களில் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யாததால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் 90 சதவீதம் தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை. குளச்சல் கடற்கரை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும். இனயம் புத்தன்துறையில் கழிவுநீர் ஓடையை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அதற்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பதில் அளித்து கூறியதாவது:-
குமரி மாவட்ட கடல் பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ரூ.1½ கோடியில் நவீன படகு புதிதாக வாங்கப்பட உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மீன்வளத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் மூலம் அனைத்து கடற்கரை கிராமங்களிலும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. இதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து கிராமங்களிலும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர் தொட்டிகளும் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகிறது. எரியாத தெருவிளக்குகளை சரிசெய்யவும், கழிவுநீர் ஓடைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் வழங்கிய 123 மனுக்களுக்கு அதிகாரி பதில்களை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
கடலாமைகளின் இனப்பெருக்க காலமான ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வரையிலான காலங்களில் கடல் ஆமைகள் கூடுகட்டும் இடங்களை வனத்துறையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இனப்பெருக்க காலங்களில் இடையூறு விளைவிக்காமல் தொழில்புரிய வேண்டும் என்று அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கடலாமை இனப்பெருக்க காலங்களில் வனத்துறை, கடலோர பாதுகாப்புக் குழுமம் மற்றும் மீன்வளத் துறையுடன் இணைந்து கூட்டு ரோந்து பணிகளை மேற்கொள்வதோடு, மீனவ கிராமங்களைச் சேர்ந்த தன்னார்வ குழுக்கள் மூலம் கடலாமை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதூர் மண்டைக்காடு முதல் குளச்சல் வரையுள்ள ஏ.வி.எம். கால்வாயின் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரி சரிசெய்ய ரூ.320.66 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் பெறப்பட்டதும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரி குறிப்பிட்டார்.
கூட்டத்தில் குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் அந்தோணி, கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மீன்பிடி தொழிலின்போது ஏற்படும் இயற்கை சீற்றங்கள், உயிர் இழப்புகள், பொருள்சேதம் போன்ற இழப்புகளை கருத்தில் கொண்டு மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தும் வலை, கயிறு மற்றும் மீன்பிடி உபகரணங்கள், மீன்கள், கருவாடுகள் ஆகிய அனைத்துக்கும் தமிழக அரசு வரிவிலக்கு அளித்து வந்தது. ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரியால் மீன், கருவாடு, உப்பு, வலை ஆகியவற்றுக்கு 5 சதவீதமும், படகு உபகரணங்களுக்கு 12 சதவீதமும், கனமான ஈயக்குண்டுகள், படகு எந்திரங்கள், வலை, நூல் ஆகியவற்றுக்கு 18 சதவீதமும், மிதவைகள் போன்ற உபகரணங்களுக்கு 28 சதவீதமும் வரியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே ஜி.எஸ்.டி. வரியில் இருந்து மீன்பிடி வலை மற்றும் உபகரணங்கள், மீன், கருவாடு, உப்பு, வலை, நூல் போன்றவற்றுக்கு விலக்கு அளித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மத்திய அரசை வற்புறுத்தி ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து விலக்கு அளித்திட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மீனவ சங்க பிரதிநிதிகள் ஆல்பின், பாபு, ஸ்டீபன், அலெக்சாண்டர், மரியஜார்ஜ், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: