District News
இனயம் பெட்டக மாற்று முனைய துறைமுக திட்டத்தை கைவிட வேண்டும்: மீன்தொழிலாளர் சங்கம்
குமரி மாவட்டத்தில் மத்திய அரசு செயல்படுத்த இருக்கும் இனயம் பன்னாட்டு பெட்டக மாற்று முனைய துறைமுக திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி குமரி மாவட்ட மீன்தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ.) சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் 27–ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
நேற்று கனமழை பெய்ததின் காரணமாக நேற்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் ரத்தானது தெரியாமல் ஏராளமானோர் வந்திருந்தனர். இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சி.ஐ.டி.யூ.) மாநிலத்தலைவர் வக்கீல் செலஸ்டின் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் செந்தில்வேல், குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க மாவட்ட கவுரவ தலைவர் அந்தோணி, தலைவர் அலெக்சாண்டர், பொதுச்செயலாளர் அந்தோணி உள்பட ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில், குமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் குடும்பங்களின் இருப்பிடத்தை அகற்றியும், வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலும் செயல்படுத்தப்பட உள்ள இனயம் பன்னாட்டு பெட்டக மாற்று முனைய துறைமுக திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
0 Comments: