Surrounded Area
குளச்சலில் மழையால் வீடு இடிந்தது: தாய்-3 மகள்கள் படுகாயம்
குளச்சலை அடுத்த சைமன்காலணி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ. இவருக்கு சொந்தமாக சைமன்காலணி 11-வது அன்பியத்தில் ஓட்டு வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஜான் போஸ்கோ அவரது மனைவி சசிகலா, மகள்கள் சவுமியா (17), வர்ஷா (14), ஆஷா (13) ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை ஜான்போஸ்கோ மீன்பிடி தொழிலுக்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது குளச்சல், சைமன்காலணி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இது பற்றி ஜான்போஸ்கோ, மனைவி மற்றும் மகள்களிடம் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
அதன்பின்பு வீட்டில் சசிகலாவும், மகள்களும் தூங்கிகொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் மேல்பகுதியில் பலத்த சத்தம் கேட்டது. திடுக்கிட்டு கண்விழித்த சசிகலாவும், அவரது மகள்களும் வீட்டைவிட்டு வெளியே வர முயன்றனர்.
அதற்குள் வீட்டின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் மளமளவென இடிந்து விழுந்தது. இதில் சசிகலாவும், அவரது மகள்களும் சிக்கிகொண்டனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கிகொண்ட அவர்கள் படுகாயம் அடைந்து வலியால் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் சசிகலா மற்றும் அவரது மகள்களை மீட்டு தக்கலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வருவாய் அதிகாரிகளுக்கும் மழையால் வீடு இடிந்த தகவல் தெரியவந்தது. அவர்கள் வந்து பார்த்த பின்பே சேதவிபரம் தெரிய வரும்.
0 Comments: