Headlines
மாப்பிள்ளை வெளிநாட்டில் தவிப்பு: மணமகள் கழுத்தில் தாலி கட்டிய தங்கை

மாப்பிள்ளை வெளிநாட்டில் தவிப்பு: மணமகள் கழுத்தில் தாலி கட்டிய தங்கை

தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்களது திருமணம் நேற்று நடைபெற நாள் குறிக்கப்பட்டது. இதற்காக அவரது குடும்பத்தினர் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் திருமண பத்திரிகை கொடுத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
மணமகன் சவுதி அரேபியா நாட்டில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். திருமணத்தையொட்டி அவர், விமானம் மூலம் நேற்று அதிகாலை திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து திருமண மண்டபத்திற்கு காரில் வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேபோல இங்குள்ள திருமண மண்டபத்தில் திருமணத்திற்காக கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திருமண விருந்தும் தடபுடலாக தயார் செய்யப்பட்டது. மணமகள் மற்றும் மணமகனின் குடும்பத்தினர் திருமண மண்டபத்தில் திரண்டனர். மணமகளை அலங்கரித்து திருமண ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து தக்கலை வருவதற்காக விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்ட மணமகன் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கினார். இதனால் அவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் விமான நிலையத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் அவர், விமானத்தை தவற விட்டார். உடனே அவர், போன் மூலம் இந்த தகவலை தனது குடும்பத்தினருக்கு தெரிவித்தார்.

இது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட நேரத்தில் திட்டமிட்டப்படி, திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். உடனே இந்த தகவலை மணமகளின் வீட்டாருக்கு தெரிவித்து, திருமணத்தை நடத்த ஒப்புதல் பெற்றனர்.

அதன்படி, மணமகனின் தங்கை மணமகளின் கழுத்தில் தாலி கட்ட திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்றவர்கள் மணமகளை வாழ்த்தி பரிசு வழங்கி சென்றனர்.

விமானத்தை தவற விட்ட மணமகன், வேறு விமானம் மூலம் இன்று சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கணவரின் வரவை எதிர்பார்த்து புதுப்பெண்ணும் இங்கு ஆவலுடன் காத்து உள்ளார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: