Surrounded Area
புயல் எச்சரிக்கை எதிரொலி: குளச்சல் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
வங்க கடலில் நாடா புயல் மையம் கொண்டுள்ளதாகவும், இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. நடுக்கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் கடலுக்கு சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த வள்ளங்கள், படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்க கடலில் நாடாபுயல் மையம் கொண்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என அறிவித்துள்ளனர்.
குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தை தங்குதலமாக கொண்டு சுமார் 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இதற்கிடையே நாடா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, இந்த விசைப்படகு மீனவர்கள் கரை திரும்ப தொடங்கினர். குளச்சலில் நேற்று பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதனால், குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதுபோல், கட்டுமரம் மீனவர்களும் தங்கள் படகுகளை கடற்கரையில் மேடான பகுதிகளில் கொண்டு பாதுகாப்பாக நிறுத்தினர்.
0 Comments: