
District News
குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை புரட்டி போட்ட சுனாமி கோர தாண்டவத்தின் 11-ம் ஆண்டு நினைவு தினம்
குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை புரட்டி போட்ட சுனாமி கோர தாண்டவத்தின் 11-ம் ஆண்டு நினைவு தினம்
25-12-2015
கடந்த 2004-ம் வருடம் டிசம்பர் 26-ம் தேதி அன்று இந்தோனேசியாவின் சுமித்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக யாரும் எதிர்பாராத, இதுவரை கண்டிராத சோக நிகழ்வு அரங்கேறியது. தமிழ்நாட்டின் கடற்கரை கிராமங்களை புரட்டி போட்டது, ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். அதாவது கடலில் எழுந்த ஆழிப்பேரலை, கடற்கரை பகுதியில் இருந்தவர்களை ஒரு நொடிப்பொழுதில் சுருட்டி கொண்டு சென்று காவு வாங்கியது. அந்த ஆழிப்பேரலை தான் ‘சுனாமி‘.
சுனாமி பேரலை தமிழகத்தின் நாகப்பட்டினம், சென்னை, கடலூர் போன்ற கடற்கரை மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி, அழிக்கால், கன்னியாகுமரி, சொத்தவிளை, குளச்சல், கொட்டில்பாடு, பிள்ளைத்தோப்பு, ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியது. சுனாமியால் மீனவர்கள் பட்ட கஷ்டம் சொல்லிமாளாது.
உயிர் சேதம் மட்டுமில்லாமல் சொந்த பந்தங்களையும், பொருளையும் இழந்தவர்கள் ஏராளம். பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர் என்று நிர்கதியானார்கள். சுனாமி தாக்கி கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் பலியான 199 பேர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். அதற்காக கொட்டில்பாடு புனித அலெக்ஸ் சர்ச் அருகில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. குளச்சலில் சுனாமியால் பலியான 414 பேரின் நினைவாக காணிக்கை மாதா ஆலய வளாகத்தில் நினைவு ஸ்தூபியும் அமைக்கப்பட்டுள்ளது. சுனாமியால் குளச்சல் பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் 34 பேர் பலியானார்கள். இவர்களுடைய உடல்கள் ரிபாய் பள்ளிவாசல் வளாகத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த கோர சம்பவம் நிகழ்ந்து, நாளையுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால் இந்த சோகம் இன்னும் மக்களின் மனதில் இருந்து நீங்கவில்லை. 11-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி நாளை மீனவ கிராமங்களில் இறந்தவர்களின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்துகிறார்கள். கடலோர பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. கொட்டில்பாடு புனித அலெக்ஸ் சர்ச்சில் சுனாமியால் இறந்தவர்களுக்கு நினைவு திருப்பலி நடைபெறுகிறது. மேலும் அங்குள்ள சுனாமி குடியிருப்பில் இருந்து மீனவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு கொட்டில்பாட்டில் உள்ள நினைவு ஸ்தூபியில் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இதேபோல் குளச்சல் காணிக்கை மாதா ஆலயத்தில் இறந்தவர்களின் நினைவாக திருப்பலியும், அருகில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவு சின்னத்தில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
0 Comments: