
சுற்றுவட்டார செய்திகள்
குளச்சல் துறைமுகத்தில் 6 கட்டுமரங்கள் தீயில் எரிந்து சேதம்
குளச்சல் துறைமுகத்தில் 6 கட்டுமரங்கள் தீயில் எரிந்து சேதம்
17-08-2015
குளச்சல் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். கடலில் மீன்பிடித்த பின்னர், தங்களின் படகுகளை கரையோர பகுதியில் நிறுத்தியிருப்பார்கள். நேற்று ஓய்வுநாள் என்பதால் நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் துறைமுக கடற்கரை பகுதியில் தங்களது வள்ளங்கள் மற்றும் கட்டுமரங்களை நிறுத்தி இருந்தனர்.
அப்போது கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில கட்டுமரங்கள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதைப்பார்த்த மீனவர்கள் தீயணைப்பு நிலைத்திற்கு தகவல் தெரிவித்தனர். குளச்சல் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். அதற்குள் 6 கட்டுமரங்கள் எரிந்து சேதம் அடைந்தன. அவை, குறும்பனையை சேர்ந்த கிறிஸ்ட் ஜெயந்தன், கொட்டில்பாட்டை சேர்ந்த எப்ரேம், ஜாண், லியோ நகர் பெபின் உள்பட 6 பேரின் கட்டுமரம் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து குளச்சல் கடலோர போலீஸ் நிலைய போலீசுக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கட்டுமரம் எப்படி எரிந்தன? என்பது குறித்து விசாரணை நடத்தினர். 6 கட்டுமரங்கள் எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments: