
District News
மார்த்தாண்டம் அருகே சூடு போட்டு சிறுவனை சித்ரவதை செய்த சித்தி கைது
மார்த்தாண்டம் அருகே சூடு போட்டு சிறுவனை சித்ரவதை செய்த சித்தி கைது
23-07-2015
மார்த்தாண்டம் அருகே பேரை இலுப்பவிளையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவருக்கும் அனிதா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடைய மகன் ரிஷி (வயது 7). ரிஷி மார்த்தாண்டம் அருகே பம்மத்தில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறான்.
![]() |
சிறுவன் ரிஷி மற்றும் உடலில் சூடு வைக்கப்பட்ட பகுதி |
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அனிதா இறந்து விட்டார். இதனையடுத்து அனிதாவின் சகோதரர் அருவிக்கரையை சேர்ந்த மனோகரன் (41) சிறுவன் ரிஷியை தங்களுடன் அனுப்புமாறு கிருஷ்ணகுமாரிடம் கேட்டுள்ளார். அப்போது என்னுடைய மகன் ரிஷியை, நான் நன்றாக பார்த்து கொள்வேன் என்று கிருஷ்ணகுமார் தெரிவித்தார். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி ரிஷியின் பெயரில் 50 சென்ட் நிலத்தை கிருஷ்ணகுமார் எழுதி வைத்தார்.
இதனை தொடர்ந்து ரிஷி தனது தந்தை கிருஷ்ணகுமாரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தான். தாய்மாமா மனோகரன் மற்றும் உறவினர்கள் அடிக்கடி சென்று ரிஷியை பார்த்து வந்தனர். இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகுமார், சந்தியா என்ற பெண்ணை 2–வது திருமணம் செய்து கொண்டார்.
![]() |
கைது செய்யப்பட்ட சித்தி |
அதன் பிறகு சிறுவன் ரிஷியை பார்ப்பதற்கு தாய் மாமா மனோகரனை அனுமதிப்பது கிடையாதாம். மேலும் சித்தி சந்தியா, ரிஷிக்கு சரியாக உணவு கொடுக்காமல் அவனை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோசை கரண்டியை தீயில் வாயில் வாட்டிய சந்தியா, ரிஷியின் காலில் சூடு போட்டதாக கூறப்படுகிறது. இதில் ரிஷியின் காலில் காயம் ஏற்பட்டது. இதையறிந்த தாய்மாமா மனோகரன் பார்க்கச் சென்றுள்ளார். ஆனால் அவரை பார்க்க அனுமதிக்கவில்லையாம். இதனால் அவர் பள்ளிக்கூடத்துக்கு சென்று ரிஷியை பார்த்தார். அங்கு சித்தி சந்தியா சூடு போட்ட இடத்தை ரிஷி காண்பித்துள்ளார்.
உடனே இதுகுறித்து மனோகரன் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், சிறுவன் ரிஷி தொடர்ந்து கிருஷ்ணகுமார், சந்தியாவின் பராமரிப்பில் இருந்தால் அவனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து ரிஷியின் தந்தை கிருஷ்ணகுமார், சித்தி சந்தியா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனையடுத்து சந்தியாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments: