Manavai News
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மணவாளக்குறிச்சி மாணவிகளுக்கு பரிசு: முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மணவாளக்குறிச்சி மாணவிகளுக்கு பரிசு: முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார்
07-07-2015
சென்னையில் வருகிற 10-ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மணவாளக்குறிச்சி மாணவி உள்பட குமரி மாணவர்கள் 20 பேருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பரிசு வழங்குகிறார்.
மாணவிகள் சந்தியா மற்றும் அபிஷா |
பிளஸ்-2 தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்து மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு சமீபத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பரிசு வழங்கி பாராட்டினார். இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்து முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு வருகிற 10-ம் தேதி சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார்.
குமரி மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த மாணவ- மாணவிகள் யாரும் இல்லை. 2-வது இடம் மற்றும் 3-வது இடத்தை 20 மாணவ- மாணவிகள் பிடித்துள்ளனர். அதாவது 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-வது இடத்தை 6 மாணவ- மாணவிகள் பிடித்துள்ளனர். தக்கலை அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி லிட்டில் ஷர்மியா, நாகர்கோவில் கோட்டார் டி.வி.டி. மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி லட்சுமி, நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ரிட்டு ஷெரின், ரியாவில்சன், அனுருத்ஸ்ரீ, குமரி மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த அபர்ணா ஆகிய 6 பேர் மாநில அளவில் 2-வது இடம் பிடித்துள்ளனர்.
500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 14 பேர் 3-வது இடம் பிடித்துள்ளனர். மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி அபிஷா, முட்டம் சகல புனிதர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த அமலா பிரதிக்ஷா, ஆசாரிபள்ளம் பெல்பீல்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த அரவிந்த் சிவன், மண்டைக்காடு புதூர் மரிய ரபோல்ஸ் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி சந்தியா, படநிலம் எஸ்.ஆர்.கே.பி.வி. மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி மீனா, மைலோடு விக்டரி மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி தன்யா, வைகுந்தபுரம் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த அஜய்ஷியா, கருங்கல் பெத்லகேம் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ரக்ஷா, விவேகானந்தபுரம் விவேகானந்தா கேந்திரா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த நிவேதிதா பாரதி, நாகர்கோவில் ராமன்புதூர் சிறுமலர் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த நிவேதா, நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்திகா, ஜீன் ஷேரன், பொன்ஜெஸ்லி பப்ளிக் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஸ்டெபி ரோஸ், புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த அஷியா ஸ்டெபி ஆகிய 14 பேர் மாநில அளவில் 3-வது இடம் பிடித்துள்ளனர்.
மாணவி சந்தியா மணவாளக்குறிச்சி ஆசாரிதெருவில் வசிக்கும் முருகன் என்பவர் மகள் ஆவார். இவர் மண்டைக்காடு புதூர் மரிய ரபோல்ஸ் மெட்ரிக் பள்ளி படித்து வருகிறார். மாணவி அபிஷா மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார்.
இவர்கள் 20 பேரும் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளரின் பாதுகாப்பில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு வருகிற 10-ம் தேதி தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்குகிறார். சென்னை செல்லும் 20 மாணவ- மாணவிகளையும் இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சந்தித்து பேசி அறிவுரைகள் வழங்குகிறார். இத்தகவலை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.
0 Comments: