District News
ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்: குமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்:
குமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
12-06-2015
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடுபட்டவர்கள் ஆதார் அட்டை பெற, அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்திய தேசிய மக்கள்தொகை இயக்குநரகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டுள்ள நபர்களுக்கு ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த 1-ம் தேதி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செயல்படுகின்ற தேர்தல் பிரிவிலும், சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்களை பொதுமக்கள் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து அவர்கள் சார்ந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்திலோ அல்லது நகராட்சி அலுவலகங்களிலோ சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் வரிசை அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும் நாளில் சம்பந்தப்பட்ட மையங்களில் நேரில் ஆஜராகி ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.
ஏற்கெனவே மக்கள் தொகை கணக்கீடு செய்யப்பட்டு ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்காதவர்களும், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள்தொகை கணக்கீடு எண் விவரங்களை பெற்று வந்து அந்தந்த மையங்களில் புகைப்படம் எடுத்து ஆதார் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments: