District News
நாகர்கோவில் விபத்தில் பலியான மாணவன், மாணவி, ஆட்டோ டிரைவர் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப்பின் ஒப்படைப்பு
நாகர்கோவில் விபத்தில் பலியான மாணவன், மாணவி, ஆட்டோ டிரைவர் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப்பின் ஒப்படைப்பு
18-06-2015
நாகர்கோவிலை அடுத்துள்ள புத்தேரி பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் நாகர்கோவிலில் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள். வடசேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் புத்தேரி பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். ஆட்டோவில் 10 பேர் இருந்தனர்.
விபத்தில் பலியான பிருத்திகா, தனுஷ், ரமேஷ் |
புத்தேரி ரெயில்வே மேம்பாலத்தில் ஆட்டோ செல்லும்போது எதிரே வந்த வேன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த மாணவ- மாணவிகள் பிருத்திகா (வயது 6), தனுஷ் (7), சுவாதி (7), அஸ்வின் (12), ஸ்ரீஜெய் (4), சஞ்சித் (4), சிவபிரியா (14), திவ்யா (3), பூஜா என்கிற கீதாஸ்ரீ (11), ஜெயராம் (7) ஆகிய 10 பேரும், ஆட்டோ டிரைவர் ரமேசும் (36) ஆக மொத்தம் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை போலீசாரும், அந்தவழியாக வாகனங்களில் வந்தவர்களும் மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மற்றும் ஆசாரிபள்ளத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பிருத்திகா, தனுஷ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். அதைத்தொடர்ந்து இரவில் ஆட்டோ டிரைவர் ரமேசும் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இவர்களில் மாணவி பிருத்திகாவின் தந்தை பெயர் சிவகுமார். இவருக்கு இன்னொரு மகனும் உள்ளார். சிவகுமார் டி.வி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். புத்தேரி கணேஷ் காலனியில் சிவகுமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மாணவன் தனுஷின் தந்தை பெயர் நாகராஜன். இவருக்கு இன்னொரு மகளும் உள்ளார். நாகராஜன் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். புத்தேரி இல்லத்தார் தெருவில் நாகராஜன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விபத்தில் இறந்த டிரைவர் ரமேஷ் புத்தேரி ஆட்டுப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆவார்.
விபத்தில் இறந்த 3 பேரின் உடல்களும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதையொட்டி மாணவ- மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களும், ஆட்டோ டிரைவர் ரமேஷ் குடும்பத்தினரும் நேற்று பிணவறை முன்பு கூடினர். அவர்கள் கதறி அழுதபடி நின்று கொண்டிருந்தது காண்போர் அனைவரையும் பரிதாபப்படச் செய்தது.
பிரேத பரிசோதனை முடிந்ததும் மாணவ- மாணவியின் உடல்கள் மற்றும் ஆட்டோ டிரைவரின் உடல் அவர்களது உறவினகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவ- மாணவியின் உடல்களைப் பெற்றுக்கொண்ட பெற்றோரும், அவர்களது உறவினர்களும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தோமே?எங்களை பரிதவிக்கவிட்டு சென்று விட்டாயே? என்று கூறி கதறி அழுதது அனைவரது கண்களையும் குளமாக்கியது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் கோட்டார் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments: