
சுற்றுவட்டார செய்திகள்
வெள்ளிச்சந்தை அருகே கர்ப்பிணி பெண்ணை தாக்கி 8 பவுன் நகை கொள்ளை
வெள்ளிச்சந்தை அருகே கர்ப்பிணி பெண்ணை தாக்கி 8 பவுன் நகை கொள்ளை
25-05-2015
வெள்ளிச்சந்தை அருகே கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மதாஸ் (வயது 55). இவர் பூமி பாதுகாப்பு சங்கத்தின் தலைவராகவும், தக்கலை கல்வி மாவட்ட பெற்றோர்–ஆசிரியர் சங்க தலைவராகவும் உள்ளார். இவரது மகள் அனித்ரா (வயது 27). இவருக்கும் கருங்கல் பகுதியைச் சேர்ந்த அஜித்குமாருக்கும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அனித்ரா நெய்யூர் தபால் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். அஜித்குமார் தற்போது கொல்கத்தாவில் டாக்டர் பட்டப்படிப்பு படித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அனித்ரா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது தந்தை வீட்டிற்கு வந்திருந்தார்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டனர். இரவு வீட்டில் அனித்ரா ஒரு அறையில் படுத்து தூங்கினார். இன்று அதிகாலை 4.30 மணியளவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் அனித்ராவின் கழுத்தில் கிடந்த செயினை பறித்தார்.
திடீரென கண் விழித்த அனித்ரா திருடனுடன் கடுமையாக போராடினார். அனித்ராவை கொள்ளையன் திடீரென தாக்கினான். உடனே அவர், திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். உடனே மற்றொரு அறையில் படுத்திருந்த அவரது பெற்றோர் அங்கு வந்தனர்.
அதற்குள் மர்மநபர் அனித்ராவின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து விட்டு தப்பியோடி விட்டார். மேலும் கழுத்தில் கிடந்த 10 பவுன் தப்பியது.
கொள்ளையனுடன் போராடியதால் நிலை குலைந்து போன அனித்ராவை அவரது பெற்றோர் சமாதானம் செய்தனர். கொள்ளை சம்பவம் பற்றி வெள்ளிசந்தை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் அந்த பகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. சந்தேகப்படும்படியாக வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. இதை தொடர்ந்து அனித்ராவிடம் போலீசார் விசாரித்தனர்.
கொள்ளையன் குறித்து அவர் கூறிய அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடந்ததை மர்மநபர்கள் நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த சம்பவம் பற்றி வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
0 Comments: