
சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே உள்ள முட்டத்தில் கடல்நீரை குடிநீராக்க ரூ.103 கோடியில் திட்டம்
மணவாளக்குறிச்சி அருகே உள்ள முட்டத்தில் கடல்நீரை குடிநீராக்க ரூ.103 கோடியில் திட்டம்
27-04-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள முட்டத்தில் கடல்நீரை குடிநீராக்க ரூ.103 கோடியில் திட்டம் நிறைவேற்றப்பட இருப்பதாக கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்தார்.
குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கினார். மீன்துறை உதவி இயக்குனர்கள் ரூபர்ட்ஜோதி, துணை இயக்குனர் மோகன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த கூட்டத்தின்போது பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. அப்போது விவாதமும் நடைபெற்றது.
முட்டம் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றி மீனவர்கள் கேட்டனர். அதற்கு கலெக்டர் பதில் அளித்தபோது, முட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.103 கோடியில் செயல்படுத்தப்பட இருப்பதாகவும், அரசின் ஒப்புதலுக்கு அது காத்திருப்பதாகவும் கூறினார்.
மேலும் மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலையால் சுற்றுப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், எனவே, அங்கு மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும் என்றும் மீனவர்கள் கோரினர். அப்போது மத்திய, மாநில பசுமை தீர்ப்பாயங்கள் மணல் குவாரிகளுக்கு விதித்த தடை பற்றியும் அவர்கள் எடுத்துரைத்தனர். இதற்கு கலெக்டர் பதில் அளிக்கையில் “மணல் ஆலை பிரச்சினை பற்றி தனியாக கூட்டம் நடத்தப்படும்” என்றார். இது தவிர மீன்துறை அல்லாத பிற துறைகள் தொடர்பான பல பிரச்சினைகள் பற்றி விவாதம் நடந்தது.
0 Comments: