
Events
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை திரளான பக்தர்கள் நள்ளிரவில் தரிசனம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை திரளான பக்தர்கள் நள்ளிரவில் தரிசனம்
11-03-2015
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விளங்கி வருகிறது. பெண்களின் ‘‘சபரிமலை’’ என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் மாசித்திருவிழா கடந்த 1–ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 10-ம் நாள் திருவிழா கொண்டாடப்பட்டது.
நேற்று அதிகாலை 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து உஷ பூஜை, உச்ச பூஜை, அடியந்திர பூஜை ஆகியவை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற குத்தியோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்களது உடலில் வெள்ளி கம்பிகளால் குத்திவிட்டு, கடலில் குளித்து விட்டு கோவிலை சுற்றி வந்தனர். அதன்பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் கோவிலில் சுத்தி கலசபூஜை நடத்தப்பட்டு நடை திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். அதிகாலையில் நடை அடைக்கப்பட்டு, மாலையில் திறக்கப்பட்டதால் அம்மனை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதன்பின்னர் கோவிலில் சாயரட்சை பூஜையும், தீபாராதனையும், இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது.
நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடங்கியது. இதற்காக மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ஸ்ரீபால்குளம் கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்களை 9 மண்பானைகள் மற்றும் பெட்டிகளில் வைத்து பூசாரிகள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதனுடன் 2 குடங்களில் தேனும் எடுத்து வரப்பட்டது. பானைகளை சுமந்து வந்த பூசாரிகள் தங்கள் வாய்களை சிவப்பு துணியால் மூடி கட்டியிருந்தனர். உணவு பதார்த்தங்களை வெள்ளை துணியால் ஒரே சீராக போர்த்தி எடுத்து வந்தனர்.
ஒடுக்கு பவனி வரும் போது, கோவிலை சுற்றிலும் எந்தவித சத்தமும் கேட்காமல் ஒரே நிசப்தமாக இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்த போதிலும் எந்தவித சத்தமும் இல்லாத அந்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த ஒடுக்குபவனி கோவிலை ஒருமுறை வலம் வந்ததும், உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன்பு இறக்கி வைக்கப்பட்டன. பின்னர் அவை அம்மனுக்கு படையலிடப்பட்டன. இதற்கிடையே குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நள்ளிரவில் ஒடுக்கு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது.
தீபாராதனை நடைபெற்று கொண்டிருக்கும் போதே கொடிமரத்தில் கோவில் கொடியை இடைக்கோடு தந்திரி மகாதேவரு இறக்கினார். அத்துடன் மாசி கொடை விழா முடிவடைந்தது. நேற்று நள்ளிரவு கோவில் உள்ளேயும், வெளியேயும் திரளான பக்தர்கள் கூடியிருந்து, ஒடுக்கு பூஜையை தரிசனம் செய்தனர்.
Photos
"Puthiya Puyal" Murugan
Manavalakurichi
0 Comments: