
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காட்டில் சப்–இன்ஸ்பெக்டர் கார் மோதி 4 பேர் படுகாயம்: பொதுமக்கள் போராட்டம்
மண்டைக்காட்டில் சப்–இன்ஸ்பெக்டர் கார் மோதி 4 பேர் படுகாயம்: பொதுமக்கள் போராட்டம்
11-03-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி அங்கு சாலையோரத்தில் வியாபாரிகள் கடைகள் அமைத்து இருந்தனர். திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று காலை அங்கு சாலையோரத்தில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கடைகளை வியாபாரிகள் அகற்றிக் கொண்டு இருந்தனர்.
காலை 10.30 மணி அளவில் அந்த வழியாக சென்ற ஒரு கார் திடீரென்று நிலைதடுமாறி சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த வெற்றிவேல் (வயது 50), சிங்களேயர்புரியை சேர்ந்த முகமது அலி ஜின்னா, திருப்பூரை சேர்ந்த சின்னான் (40), மண்டைக்காடு கீழக்கரையை சேர்ந்த நடேசன் (60) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களில் நடேசன் மண்டைக்காடு கோவிலில் வில்லிசை நடத்தும் கலைஞர் ஆவார். மற்ற 3 பேரும் திருவிழா கடை போட்டு இருந்த வியாபாரிகள் ஆவார்கள். இந்த விபத்தை பார்த்ததும் அங்கு இருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். விபத்திற்கு காரணமான காரை முற்றுகையிட்டு தாக்கினார்கள். இதில் அந்த காரின் கண்ணாடி உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவல் கிடைத்ததும் மண்டைக்காடு கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அங்கு சென்று பொதுமக்களை அமைதிப்படுத்தி காரில் இருந்தவரை மீட்டு விசாரணை நடத்தினார்கள். போலீசார் விசாரணையில் அந்த காரை ஓட்டி வந்தவர் கீரிப்பாறை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தாமோதரன் என்பது தெரிய வந்தது.
அவர் கோவிலுக்கு காரில் வந்தபோது எதிர் பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments: