Manavai News
மணவாளக்குறிச்சி ஸ்தம்பித்தது: அரசு மகளிர் மேல்நிலைபள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் சாலை மறியல் போராட்டம்
மணவாளக்குறிச்சி ஸ்தம்பித்தது: அரசு மகளிர் மேல்நிலைபள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் சாலை மறியல் போராட்டம்
07-11-2014
மணவாளக்குறிச்சி சின்னவிளை ரோட்டில், கடியப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் வில்வம். இவர் சுமார் 1½ ஆண்டுகளாக இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் தலைமையில் இப்பள்ளி பள்ளி இறுதி தேர்வில் முழு தேர்ச்சியினை பெற்றுள்ளது. பள்ளி நிர்வாகமும் சிறந்த முறையில் செயல்பட்டு வந்தது. தலைமையாசிரியர், தன்னுடைய பணியினை சிறந்த முறையில் செய்து வந்த நிலையில், திடீரென கல்வி நிர்வாகம் அவரை வேறு இடத்திற்கு மாற்றி விட்டு, புதிய தலைமையாசிரியராக மேசையாதாஸ் என்பவரை நேற்று முதல் நியமித்தது.
நாகர்கோவில்-மணவாளக்குறிச்சி-குளச்சல் சாலையில் அமர்ந்து போராடும் பள்ளி மாணவிகள் |
திடீரென தங்களுடைய தலைமையாசிரியர் மாற்றப்பட்டதால், பள்ளி மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்டித்து நேற்று மாணவிகள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இன்று காலை மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அவர்களுடன் பெற்றோர்களும் வந்தனர். பெற்றோர்கள் கூறும் போது, “பழைய தலைமையாசிரியர் வழிகாட்டுதலில் பள்ளியின் தேர்வு முடிவுகள் சிறப்பாக இருந்த நிலையில், திடீரென அவரை ஏன் மாற்றினார்கள். இதனால் பள்ளியின் கல்வித்தரம் பாதிப்படையும். எனவே மீண்டும் பழைய தலைமையாசிரியரையே பணி நியமனம் செய்யவேண்டும்” என கூறினர்.
இந்நிலையில் இன்று காலை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் கே.ஐயப்பன் தலைமையில் மாணவிகளும், பெற்றோர்களும், பொதுமக்களும் இணைந்து பள்ளி வளாகத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேரம் செல்லச்செல்ல அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் வந்தனர். இதனால் பள்ளி வளாகத்தினுள் நடைபெற்ற போராட்டம் சூடுபிடித்தது. மதியம் வரை நடைபெற்ற போராட்டத்தால், எந்த முன்னேற்றமும் இல்லை. கல்வி துறை சார்ந்த எந்த அதிகாரியும் வந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இதனால், சுமார் 2 மணி அளவில் மாணவிகளும், பெற்றோர்களும், பொதுமக்களுமாக இணைந்து, ஊர்வலமாக மணவாளக்குறிச்சி சந்திப்பு வந்தனர். வரும்போது “எங்களுக்கு பழைய தலைமையாசிரியரே வேண்டும்” எனக்கோஷமிட்டபடி வந்தனர். தொடர்ந்து சந்திப்பு பகுதி வந்த மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். கடுமையான வெயிலில் அமர்ந்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் வந்த வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. சுமார் 1½ மணி நேரம் போராட்டம் நடந்த நிலையில் ஆர்டிஓ அருண்சத்யா சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அவர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார் எனவே சாலையில் அமர்ந்துள்ள மாணவிகளை பள்ளிக்கு செல்லும்படி கேட்டுகொண்டார்.
இதை தொடர்ந்து மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். சற்று நேரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இராதாகிருஷ்ணன் வந்தார். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் ஆர்டிஓ அருண்சத்யா, டிஓ ஜேக்கப் அருள் மாணிக்கராஜ், தாசில்தார் சு.நாகேந்திரா, ஆர்.ஐ நாகேஸ்வரி, கிராம நிர்வாக அதிகாரி தாரணி, புதிய தலைமையாசிரியர் மேசையாதாஸ், மாதர் சங்க தலைவி அல்போன்சா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கே.ஐயப்பன், பா.ஜனதா கட்சி வக்கீல் மணிகண்டன், கார்த்தீசியன், கம்யூ. கட்சி புவனேந்திரன், ஜெயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறைக்கு கலெக்டர் மூலமாக, இது தொடர்பான அறிக்கையினை கொடுப்போம் என்று கூறினர். இதனை ஏற்க மறுத்ததால், சுமார் 1 மணி மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
பேச்சுவார்த்தையில் ஒழுங்கான முடிவு கிடைக்கப்பெறாததால் மாணவிகளும், பெற்றோர்களும் கவலையுற்றனர். தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு வருவதால், திங்கள்கிழமை அடுத்தகட்ட நிலைகுறித்து முடிவு எடுக்கப்படும் என பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் கே.ஐயப்பன் கூறினார். தொடர்ந்து அனைவரும் கலந்து சென்றனர்.
மாணவிகளின் இந்த போராட்டத்தால், மணவாளக்குறிச்சி சில மணி நேரம் ஸ்தம்பித்தது. போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்தது. மாலையில் அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு இருந்தனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
0 Comments: