Ladies Special
குமரி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிறப்பு காவல் படை
குமரி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிறப்பு காவல் படை அமைப்பு போலீஸ் சூப்பிரண்டு தகவல்
01-01-2013
குமரி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிறப்பு காவல் படை அமைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறினார். குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :–
குமரி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், கேலி–கிண்டலை தடுக்கவும் தமிழ்நாட்டில் முதல் முறையாக சிறப்பு காவல் படை (உமன்ஸ் விங்) அமைக்கப்பட்டு உள்ளது. கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் சாலைகளில் நடந்து செல்லும் போது யாராவது கேலி–கிண்டல் செய்தாலோ அல்லது வேறு எங்காவது பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்தாலோ சிறப்பு காவல் படைக்கு தெரிவிக்கலாம்
இதற்காக நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் ஆகிய 4 உபகோட்ட பகுதிகளுக்கும், 4 ரோந்து வாகனங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் 2 போலீஸ், டிரைவர் ஆகியோர் இருப்பார்கள். இந்த சிறப்பு காவல் படையினர், மகளிர் காவல் நிலையத்துடன் இணைந்து 24 மணி நேரமும் செயல்படுவார்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால் உடனே கட்டுப்பாடு அறை எண் 100, 1098 மற்றும் சிறப்பு ரோந்துப்படைக்கு ஒதுக்கப்பட்டுள்ள செல்போன்களுக்கு தெரிவிக்கலாம். நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் (டபிள்யு.டபிள்யு.–1) செல்போன் எண் 89033 18710–க்கும், தக்கலையை சேர்ந்தவர்கள் (டபிள்யு.டபிள்யு.–2) செல்போன் எண் 89033 18711–க்கும், குளச்சலை சேர்ந்தவர்கள் (டபிள்யு.டபிள்யு.–3) செல்போன் எண் 89033 18712–க்கும், கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் (டபிள்யு.டபிள்யு.–4) செல்போன் எண் 89033 18713–க்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் எஸ்.எம்.எஸ். மூலமும் தகவல் அனுப்பலாம்.
தகவல் கிடைத்ததும் அவர்கள் விரைந்து சென்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு காவல் படை புத்தாண்டு தினத்தில் (நேற்று) இருந்து செல்படுகிறது. மேலும் கல்லூரிகளிலும் புகார் பெட்டிகள் அமைக்கப்படும்.
நாகர்கோவிலில் போக்குவரத்து நெருக்கடியை ஒழுங்குபடுத்த நாளை கூட்டம் நடத்த இருக்கிறோம். அப்போது எந்த பகுதிகளை ஒருவழிப்பாதையாக மாற்றுவது, நகருக்குள் லாரி வந்து செல்லும் நேரம், அதிக பாரம் உள்ள வண்டிகள் எந்த வழியாக செல்ல வேண்டும் என்பவை தீர்மானிக்கப்படும்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்திலேயே ரூ.3 கோடியில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம், நில மோசடி தடுப்பு பிரிவு, கைரேகை பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த போலீஸ் அலுவலக வளாகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது, இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறினார்.
அதன்பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு காவல் படையினருக்கு செல்போன்களை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் வழங்கினார். இதைத்தொடர்ந்து 4 சிறப்பு ரோந்து வாகனங்களையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுதேசன் உடன் இருந்தார்.
0 Comments: