District News
‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரி குமரி மாவட்டத்தில் 2 இடங்களில் தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம்
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்‘ தேர்வு அடிப்படையில் நடைபெறு கிறது. இதில் ‘நீட்‘ (National Eligibility and Entrance Test - NEET) தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ‘நீட்‘ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று (27-7-2017) மனித சங்கிலி போராட்டம் நடந்தது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் தக்கலை ஆகிய 2 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். நாகர்கோவிலில் நடந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், பிரின்ஸ் (காங்கிரஸ்) மற்றும் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், மாவட்ட பொருளாளர் கேட்சன், அணி அமைப்பாளர்கள் சிவராஜ், வக்கீல் உதயகுமார், நகர செயலாளர் மகேஷ், பெர்னார்டு, தில்லை செல்வம், வக்கீல் சரவணன், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முருகேசன், அந்தோணி உள் பட திரளானோர் கலந்து கொண்டனர். நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையம் முதல் மணிமேடை சந்திப்பு வரை அனைவரும் கைகோர்த்து அணிவகுத்து நின்றனர்.
இதுபோல் தக்கலையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், விஜயதரணி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், மாதவன், சைமன் டைலஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் அசோகன் சாலமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.வினர் நடத்திய மனித சங்கிலி போராட் டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனினும் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் நாகர்கோவிலில் 3 எம்.எல்.ஏக்கள் உள்பட 550 பேர் மீதும், தக்கலையில் 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 340 பேர் மீதும் என மொத்தம் 890 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
0 Comments: