
சுற்றுவட்டார செய்திகள்
ராஜாக்கமங்கலம் துறையில் சிலிண்டர் வெடித்து சிதறியது: 4 பேர் உயிர் தப்பினர்
ராஜாக்கமங்கலம் துறையில் சிலிண்டர் வெடித்து சிதறியது: 4 பேர் உயிர் தப்பினர்
01-01-2016
ராஜாக்கமங்கலம் அருகே ராஜாக்கமங்கலம் துறை செபஸ்தியார் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபிஷா (வயது 33). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அபிஷ்ஷா கடந்த 3 நாட்களுக்கு முன்பு பக்கத்து தெருவில் உள்ள தனது தாயார் வினிதா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றிருந்தார்.
நேற்று இரவும் அங்கேயே தங்கினார். இன்று அதிகாலை அபிஷ்ஷாவின் வீட்டில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்து குடியிருப்பில் உள்ளவர்கள் கண்விழித்து வெளியே ஓடிவந்து பார்த்தனர். அப்போது அபிஷாவின் வீட்டில் இருந்து புகை மண்டலம் வந்துகொண்டிருந்தது.
இதையடுத்து தாயார் வீட்டில் தங்கியிருந்து அபிஷாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக அங்கு விரைந்து வந்தார். கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறி இருந்தது தெரியவந்தது.
சிலிண்டர் வெடித்ததில் வீட்டில் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தது. வீட்டின் சுவர்களும் இடிந்து காணப்பட்டது. கியாஸ் சிலிண்டர் வெடித்த நேரத்தில் அபிஷா தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டில் தங்கியிருந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
கியாஸ் சிலிண்டர் எப்படி வெடித்தது என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கியாஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் ராஜாக்கமங்கலம் துறை பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments: