
District News
நாகர்கோவில் அருகே பணப்பெட்டிகளுடன் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி மீட்பு: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டன
நாகர்கோவில் அருகே பணப்பெட்டிகளுடன் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி மீட்பு: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டன
23-08-2015
நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி 2 கண்டெய்னர் லாரிகள் சென்று கொண்டிருந்தன. அந்த லாரிகள் மதியம் 11-30 மணி அளவில் தேரேகால்புதூர் பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகில் வந்தபோது பின்னால் வந்த லாரியின் குறுக்கே ஆடுகள் பாய்ந்து ஓடின. அந்த ஆடுகள் மீது லாரி மோதாமல் இருப்பதற்காக, லாரியை இடது புறமாக திருப்பினார். இதில் லாரி கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரமாக இருந்த மின்கம்பத்தில் மோதி அருகில் உள்ள குளத்தில் பாய்ந்தது.
கவிழ்ந்த கண்டெய்னர் லாரிக்கு முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி சற்று தொலைவில் அதாவது தேரேகால்புதூரில் ரோட்டோரம் ஒதுக்கி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே காவல்கிணறு சந்திப்பு அருகே உள்ள மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு உட்பட்ட திரவ திட்ட இயக்க மையத்தில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து கவிழ்ந்த கண்டெய்னர் லாரியை சுற்றியும், தேரேகால்புதூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியைச் சுற்றியும் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கவிழ்ந்த லாரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு சொந்தமான ராக்கெட் உதிரி பாகங்களாக இருக்கும் என்று கூறப்பட்டது.
மாலை 6 மணி அளவில் உள்ளூர் போலீசார் அங்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததோடு, இரவில் கவிழ்ந்த லாரியை மீட்பதற்கு வசதியாக 2 ஜெனரேட்டர்களை வரவழைத்தனர். அவற்றின் மூலம் சோடியம் விளக்குகளை அமைத்து, இருண்டு கிடந்த அப்பகுதியை வெளிச்சமாக்கினர். இதற்கிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கூடுதலாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு அவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடத் தொடங்கினர். அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் திருவனந்தபுரத்தில் வங்கி உயர் அதிகாரிகள் சிலர் அங்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கவிழ்ந்த கண்டெய்னர் லாரியில் இருந்தது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சொந்தமான ராக்கெட் உதிரி பாகங்கள் இல்லை. கட்டு, கட்டாக ரூபாய் நோட்டுகளைக் கொண்ட பெட்டிகள் என்ற தகவல் கசியத் தொடங்கியது. மைசூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அவற்றை கொண்டு சென்றபோதுதான் இந்த விபத்து நடந்ததாக பேசப்பட்டது. இரவு 11 மணி வரை எந்த மீட்பு பணியும் நடைபெறவில்லை. கவிழ்ந்து கிடந்த கண்டெய்னர் லாரியில் இருந்த பணப்பெட்டிகளை கொண்டு செல்வதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து 3 கண்டெய்னர் லாரிகளும் வரவழைக்கப்பட்டது. 15-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் பணியாளர்களும் ஒரு வேனில் வந்தனர்.
11.15 மணிக்கு குளத்தில் பாய்ந்த கண்டெய்னர் லாரியை மீட்பதற்கான ராட்சத கிரேன் ஒன்றும், சாதாரண கிரேன் ஒன்றும் விபத்து நடந்த பகுதிக்கு வந்து சேர்ந்தது. நள்ளிரவு 12.45 மணி அளவில் கவிழ்ந்து கிடந்த கண்டெய்னரை இரும்புக் கயிற்றால் இணைத்து ராட்சத கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 1 மணி அளவில் கண்டெய்னரை தூக்கி சாலையில் நிறுத்தினர். அதையடுத்து 1.15 மணி அளவில் லாரியின் கேபின் பகுதி தூக்கி நிறுத்தப்பட்டது. பின்னர் 2 மணி அளவில் தூக்கி நிறுத்தப்பட்ட கண்டெய்னரின் பின்புற கதவு ‘சீல்‘ உயர் அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டு கதவு திறக்கப்பட்டது. பின்னர் கவிழ்ந்து கிடந்த கண்டெய்னரில் இருந்து பணப்பெட்டிகள் திருவனந்தபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர்களில் ஏற்றும் பணி தொடங்கியது.
மொத்தம் 210 பெட்டிகளில் பணக்கட்டுகள் இருந்தன. அதில் 85 பெட்டிகள் ஒரு கண்டெய்னர் லாரியிலும், 75 பெட்டிகள் மற்றொரு கண்டெய்னர் லாரியிலும், 50 பெட்டிகள் மேலும் ஒரு கண்டெய்னர் லாரியிலுமாக ஏற்றப்பட்டன. இந்தப்பணி நேற்று காலை 6.15 மணி வரை நடந்தது. காலை 7 மணி அளவில் பணப்பெட்டிகள் ஏற்றப்பட்ட 3 கண்டெய்னர் லாரிகளும், ஏற்கனவே தேரேகால்புதூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பெரிய கண்டெய்னர் லாரி ஒன்றுமாக மொத்தம் 4 கண்டெய்னர் லாரிகள் பலத்த பாதுகாப்புடன் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றன.
0 Comments: