District News
குமரி மாவட்ட புதிய முதன்மைக்கல்வி அதிகாரியாக ஜெயக்குமார் பொறுப்பேற்றார்
குமரி மாவட்ட புதிய முதன்மைக்கல்வி அதிகாரியாக ஜெயக்குமார் பொறுப்பேற்றார்
05-06-2015
குமரி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியாக, விருதுநகர் மாவட்டத்தில் முதன்மைக்கல்வி அதிகாரியாக பணியாற்றிய ஜெயக்குமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதையடுத்து வெ.ஜெயக்குமார், முதன்மைக்கல்வி அதிகாரியாக நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அப்போது அவர் கூறியதாவது:- எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் குமரி மாவட்டத்தை மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு முதல் இடத்துக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்வேன். பள்ளி செல்லாக்குழந்தைகளை கண்டறிந்து பிளஸ்-2 வகுப்பு வரை பள்ளிப்படிப்பை முடிக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
மேலும் மாணவ- மாணவிகளுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், ஊழியர்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்வேன். இவ்வாறு முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் கூறினார்.
இவர், கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்வு மூலம் கல்வி மாவட்ட அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். 2009-ம் ஆண்டு மதுரை மேலூரில் கல்வி மாவட்ட அதிகாரியாக பயிற்சியை தொடங்கினார். 2010-ம் ஆண்டு திருச்சியில் மெட்ரிக். பள்ளிகளின் ஆய்வாளராகவும், 2011- 2012-ம் ஆண்டில் முசிறி கல்வி மாவட்ட அதிகாரியாகவும், 2012- 2013-ல் அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக்கல்வி அதிகாரியாகவும், 2013-ம் ஆண்டு முதல் இதுவரை விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.
இவரது சொந்த ஊர் மதுரை ஆகும். இந்த பணிக்கு வருவதற்கு முன்பு மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments: