
Manavai News
மணவாளக்குறிச்சி பகுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மீது கார் மோதி பயங்கர விபத்து
மணவாளக்குறிச்சி பகுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மீது கார் மோதி பயங்கர விபத்து
15-04-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள பரப்பற்று பகுதியை சேர்ந்த நாகராஜன். என்பவரது மகள் திவ்யா (வயது 14), அதே பகுதியை சேர்ந்த ஜாண்சன் என்பவரது மகள் சந்தியா (14), கூட்டுமங்கலம் பகுதியை சேர்ந்த ததேயூஸ் வில்லியம் என்பவரது மகள் அபிஷா (14), நாராயணன் பிள்ளை என்ற மோகன் என்பவரது மகள் தர்ஷனா (12) ஆகிய 4 பேரும் மணவாளக்குறிச்சியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
![]() |
பள்ளி மாணவிகள் மீது மோதிய கார் |
இதில் திவ்யா, சத்யா மற்றும் அபிஷா ஆகிய 3 பேரும் 9-ம் வகுப்பும், தர்ஷனா 7-ம் வகுப்பும் படித்து வந்தனர். தற்போது இவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக இவர்கள் 4 பேரும் பள்ளிக்கூடம் வருவதற்காக கூட்டுமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் சுமார் மதியம் 12.30 மணி அளவில் பேருந்துக்காக காத்து இருந்தனர்.
![]() |
பேருந்து நிறுத்தத்தில் மாணவிகள் இருந்த இடம் அருகே விபத்துக்குள்ளான கார் |
அப்போது மணவாளக்குறிச்சியில் ஒரு கார் குளச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கார் நிலைதடுமாறி ரோட்டை விட்டு இறங்கி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்து இருந்த மாணவிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 மாணவிகளின் கால்களும் பலத்த சேதம் அடைந்தது. அவர்களின் கால்கள் துண்டானதாக கூறப்படுகிறது. ஒரு மாணவி காரின் கீழ் பகுதியில் பலத்த காயத்துடன் விழுந்து கிடந்தார். அந்த மாணவியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
![]() |
பேருந்து நிறுத்தம் மேல் ஏறி நிற்கும் கார் |
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலத்த காயமுற்ற மாணவிகளை நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு சிகிட்சைக்காக அனுப்பி வைத்தனர். காரை ஓட்டிவந்த குளச்சல், சாஸ்கான்கரையை சேர்ந்த சதீஷ் குமார்(57) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக தெரிகிறது.
![]() |
சம்பவ இடத்தில் போலீசாரும், பொதுமக்களும் |
இந்த விபத்தால் பரப்பற்று, கூட்டுமங்கலம் பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் சோகத்துடன் காணப்படுகின்றனர். மேலும் அப்பகுதி மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறது. அங்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
0 Comments: