சுற்றுவட்டார செய்திகள்
ராஜாக்கமங்கலம் அருகே வாய்க்கால் வெள்ளத்தில் சிக்கி தச்சு பட்டறை உரிமையாளர் பலி
ராஜாக்கமங்கலம் அருகே வாய்க்கால் வெள்ளத்தில் சிக்கி தச்சு பட்டறை உரிமையாளர் பலி
23-11-2014
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள காரவிளையை சேர்ந்தவர் எஸ்.பி.குட்டி. இவரது மகன் பாரதிதாசன் (வயது 38). இவர் ராஜாக்கமங்கலத்தில் மரக்கடசல் கடை நடத்தி வருகிறார். இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள பன்றி வாய்க்காலில் குளிப்பது வழக்கம். நேற்று காலையிலும் தனது மோட்டார் சைக்கிளை கரையில் நிறுத்தி விட்டு குளிப்பதற்காக வாய்க்காலில் இறங்கினார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக, திடீரென்று பன்றி வாய்க்காலில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் பாரதிதாசனை இழுத்து சென்றது. இதிலிருந்து வெளியே மீண்டு வர முடியாமல் அவர் வெள்ளச்சுழலில் சிக்கிக் கொண்டார். அப்போது கரையில் இருந்து பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
3½ மணி நேர தேடுதலுக்கு பிறகு, அவர் குளிக்க இறங்கிய அந்த பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அவரது உடலை தீயணைப்பு துறையினர் பிணமாக மீட்டனர். இறந்து போன பாரதிதாசனுக்கு ரெஜிகலா (35) என்ற மனைவியும், சகானா (4) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாரதிதாசனின் தந்தை எஸ்.பி.குட்டி ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் கொடுத் தார். அதன் பேரில் போலீஸ் ஏட்டு அருள்தாஸ் வழக்கு பதிவு செய்தார். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மோகனன் விசாரணை நடத்தி வருகிறார்.
0 Comments: